Friday, December 30, 2016

Poetic Companion to Dummies' Guide. Part 1: Alamu R



Part 1: Alamu R




நான் மனிதப் பிறப்பு அன்றோ?
என் உடம்பு சதையும் ரத்தமும் சேர்ந்தது தானே?
அதில் விருப்பும் வெறுப்பும் ஊறுமன்றோ?

அப்படியென்றால்
என்னைக் காமப்பொருளாய் சித்தரித்து பார்ப்பது ஏனோ?
அதே காமக் கண்கள்
சீண்டத் துடிக்கும் கைகள்
சீண்டிய பின் வெற்றிக் கொண்ட துப்பு கெட்ட மனப்பான்மை

ஒரு தடவை கிடையாது
பல நூறு தடவை
பலப்பல வெளிப்பாடுகளில்
உருவங்கள் மட்டுமே வேறாயின

குழந்தைப பிராயத்தில் கண்டிப்பாய் சீண்டியவருண்டு
எனக்கு நினைவுதான்யில்லை
சின்னஞ்சிறு வயதில் விளையாடிக் கொண்டுயிருக்கும் போது
தோழன் எனக் கருதியவன் தோரணையாய் தொடையைச் கில்லினான்
பள்ளிப் பிராயத்தில் போதிக்கும் ஆசிரியரே
கண்ணத்தை சிண்டினார்
வீட்டில் யாருமில்லா சமயத்தில் மாமா மார்பகத்தை
இறுக்கி சில்மிஷம் செய்தார்
பேருந்தில் பயணித்த போது அப்பா பிராயமுடைய நடுவயதுக்காரர்
ஓரச்சிக் கொண்டே கையை பிசைந்து அற்ப சந்தோஷத்தை தேடினார்
காதல் எனக் கூறியவன் படத்திற்கு அழைத்துச் சென்றது
வலுக்கட்டாயமாக உதட்டோடு உதட்டை உரசிக் கொள்ளவே
மணமுடித்த கணவரோ ஒட்டுமொத்த கமப்பொருளாகவே
என்னைக் கருதி ஒவ்வொரு முறையும் அணுகினான்

அரிசி வாங்க கடைக்கு சென்றால் அங்கே
சில்லரை கொடுக்கும் சாக்கில் என் விரலை தொட்டு அணைக்கிறான் அவன்
அடே சண்டாளர்களா!

என் கண் இமைகளைக் கூட விட்டு வைக்கவில்லையே நீங்கள்!

ஒவ்வொரு முறை நடுநடுங்கி தைரியத்தோடு
வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால்

அவர்களோ
'பெண் என்றால் இது எல்லாம் சகஜம்,
சகித்துக் கொள்ளக் கற்றுக்கொள்' என
என் தலையை வருடி கொடுக்கிறார்கள்.

என் கூச்சல் ஒலிக்கின்றதா?
யாராவது கேட்கின்றீர்களா?

நீ சீண்டி லயிக்கும் இடம் கிடையாதடா நான்
நீ மையலிட்டு விளையாடும் மைதானம் நான் கிடையாது

இது என் உடம்பு
என் உடம்பு என்றால் என்ன என்று புரிகிறதா?
உங்கள் மரைமண்டையில் உரைக்கின்றதா என்ன?

----------------
Read about the Poetic Companion to the Dummies' Guide.

No comments:

Post a Comment